தயாநிதியின் ஆங்கில மோகம்?

தொலைக் காட்சியில் செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் ஒன்றை கவனித்திருக்கக் கூடும்.

செய்திக்காக பேட்டி எடுக்கும் போது தமிழக அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தில் வலுக்கட்டாயமாக பேசுவதை.

நேற்று 'மக்கள்' தொலைக்காட்சியில் மா.நன்னன் அவர்கள் தமிழில் பேசுவதின் முக்கியத்துவத்தை மிக அழகாக சொன்னார். அதில் தமிழ் வார்த்தை 'கமுக்கமாக ' என்பதைப் பற்றி விளக்கினார். உண்மையில் சொல்லப் போனால் இந்த வார்த்தை தமிழ் தான் என்று இதற்கு முன்பு வரை எனக்கு தெரியாது. நான் இதை 'சென்னை மொழி' என்றே நினைத்து வந்தேன். கமுக்கம் என்பதின் அர்த்தம் 'இரகசியம்' என்ற வடமொழியின் பொருள் தருகிறது.

தமிழர்கள் தமிழை புறக்கணித்தால் ஏற்படும் விளைவுகளையும், அருகி வரும் மொழிகளில் தமிழும் ஒன்று சொன்ன போது உண்மையாகவே வலித்தது.

அடுத்து சன் தொலைக்காட்சியின் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது சன் பவுண்டேஷன் ஒரு கல்லூரிக்கு 23 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து விட்டு மாணவி(வர்க)ளிடம் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

தமிழ் நாட்டில், அதுவும் தமிழ் மாணவர்களிடம், தமிழில் பேசினால் என்ன குறைந்தா போய்விடுவார்?. நாம் என்ன இலக்கியத் தமிழிலா பேசச் சொல்கிறோம். (அதுக்காக ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்றெல்லாம் பேசக் கூடாது) .தமிங்கிலீசில் பேசியிருந்தாலும் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம்.

இவரை ஒப்பிடும் போது லத்திகா சரண் எவ்வளவோ தேவலை. அவர் தமிழ் பேசும் அழகே அழகு. அவர் கூடுமானவரை தமிழிலேயே பதில் சொல்லும் போது எவ்வளவு பெருமையாக இருக்கிறது. இவரைப் போல இன்னும் பலர்.

தமிழர்களிடம் தமிழில் பேசுவதில் என்ன தயக்கம்?. என்ன கேவலம்?.

தமிழ் படிக்க மறுத்(றந்)து விட்டால் வரும் இழப்பு நமக்கே.