நான் ப்ராமணன் இல்லை

என் சொந்த வாழ்க்கையை பதிவு செய்யும் "ஆட்டோகிராப்' பதிவு இது.

என்னுடை இன்றைய வளர்ச்சிக்கு காரணமான என் பாட்டிக்கு இந்த பதிவு சமர்ப்பனம்.

நாங்கள் வசிப்பது பிராமணர் தெருவில் தான். ஆனால் நாங்கள் பிராமணரல்ல. எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்தே என் தாயார் ஒரு ஐயங்கார் வீட்டில் தான் வேலை செய்து வந்தார். அந்த வீட்டில் ஒரே ஒரு பாட்டி மட்டும் தான். அவர்களுக்கு குழந்தை இல்லை. அது ஐயர் தெரு என்பதால் மற்ற ஜாதிக் காரர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். யாரும் அவர்களின் வீட்டிற்குள் அனுமதி கிடையாது. கொல்லைப்புறமாகத் தான் சென்று வீட்டு வேலை செய்ய வேண்டும். காபி குடுத்த தம்ளரை கழுவி வைத்தாலும் அவர்கள் அதன் மேல் தண்ணீர் தெளித்து தான் கொண்டு செல்வார்கள். அவர்களைத் தொடக்கூடது. தொட்டுவிட்டால் அவ்ளோ தான். பயங்கரமாக திட்டுவார்கள். ஆனால் மேற்சொன்ன அத்தனை கட்டுப்பாடுகளையும் உடைத்து அந்த பாட்டியிடம் நான் விளையாடுவேன். அவர்களின் பூஜை அறையையும், சமையல் அறையையும் விட்டு வைக்க மாட்டேன். அவர்களைத் தொட்டு விட்டால் கூட கடிந்து கொள்ள மாட்டார்கள்.

இதனால் மற்ற ஐயர் வீட்டினரெல்லாம் அந்த பாட்டியிடம் சென்று இது மாதிரியெல்லாம் சூத்திரர்களை அனுமதிக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் பாட்டி கண்டுக்கவே மாட்டாங்க. ஆனால் பாட்டியின் சொந்தக் காரங்க யாராவது வந்தா மட்டும் நான் கொஞ்சம் 'அடக்கி வாசிப்பேன்'. அவர்களின் வீட்டிலேயே படிப்பது, விளையாடுவது, தூங்குவது (என் வீட்டிலுள்ள அனைவரும்), பாட்டிக்கு கடைக்கு செல்வது, கோயிலிக்கு கூட்டி செல்வது எல்லாமே.

என் வீட்டில் அசைவம் செய்தால் மட்டும் அவர்களின் பூஜை அறைக்குள் நுழைய விட மாட்டார்கள். எங்கள் வீட்டில் வடை , பாயாசம் செய்தால் மற்ற யாருக்கும் தெரியாமல் கொண்டு போய்க் கொடுப்போம். எங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள் ஏராளம்.

அந்த கால கட்டத்தில் (1975-1990) இந்த மாதிரி முற்போக்காக யாரும் அந்தத் தெருவில் கிடையாது. சிறுவயதில் ஒருமுறை பாட்டியிடம் விளையாட்டாக 'ஐ லவ் யூ!' என்று சொல்லி அதற்கு பாட்டி என் வயசு என்ன? உன் வயசென்ன? நீ எப்படி என்னைப் பார்த்து சொல்லலாம் என்று கொஞ்சம் டென்ஷாகி விட்டார்கள். என் அம்மாவிடம் புகாரிட்டார்கள். நான் பாட்டியை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அவர்களுக்கு லவ் என்பதின் அர்த்தம் காதல் மட்டுமல்ல, பாசம், நேசம், பரிவு, அன்பு என்று கூறிய பிறகு கொஞ்சம் சமாதானமடைந்தார்கள்.

எங்களுக்கு படிப்பின் அருமையை சொல்லிக் கொடுத்ததே அவர்கள் தான். சில சமயம் விளையாட்டாக ' ஆமா இவரு படிச்சு பெரிய ஐஏஸ் ஆபிசராவப் போறாரு. அமெரிக்கா போகப் போறாரு என்று கூறுவார்கள். இந்த பேச்சே எங்களை படிக்க தூண்டியது. அவர்கள் கூறியபடி ஐஏஸ் ஆபிசரோ அல்லது அமெரிக்காவோ போகவில்லை என்றாலும் கிட்டத் தட்ட ஆசியாவை சுற்றியிருக்கிறேன். ஆனால் எங்களின் வளர்ச்சியைப் பார்க்க அவர்கள் இல்லை. என் வளர்ச்சி ஏணியின் ஒவ்வொரு படிக்கட்டினை ஏறும் போதும் அவர்களை நினைக்கத் தவறுவதில்லை.

சொல்லுங்கள் இப்போது. இந்தப் பாட்டி பிராமணனா? மனிதனா??கடவுளா???